தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் கடந்த 12,13ம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆற்காட்டுத்துறை மீனவர் கிரமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாராயணசாமி, வாசகன் என்ற மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் இந்த கொடூரமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சமீபகாலமாக தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்களை கைது செய்வதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய அராஜகத்தை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.