சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு உயிர் கொடுத்ததே பாட்டாளிமக்கள் கட்சித்தான் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கிடப்பில் போடப்பட்டுக்கிடந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு உயிர் கொடுத்ததே பா.ம.க.தான் என்றும் இத்திட்டம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது என்றும் கூறினார்.
படிப்படியாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறினாலும் இன்னும் முதல் படியைக்கூட தாண்டவில்லை என்றுகூறிய அவர், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு முட்டுக்கட்டைப்போட நினைத்தால் பாட்டாளிமக்கள் கட்சி சும்மாவிடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திட்ட ஆலோசகரை நியமிக்காமல், அறிக்கையும் தயாரிக்காமல், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரத்தையும் திரட்டாமல் அடிக்கல் நாட்டப்பட்டது விளம்பரத்துக்கா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகிக்கிறது. இந்த ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம்தான் தேர்தல் வரும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குருவை கைது செய்துள்ளனர். இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் துவண்டு விடாது. இப்பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.