தமிழகத்தில் தி.மு.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலக்கிக் கொள்ள இருப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் நேற்று விலக்கி கொண்டது. இதனால் தமிழகத்திலும் தி.மு.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ள இருப்பதாக இன்று செய்திகள் வெளியாயின.
இது தொடர்பாக தா.பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலக்கி கொள்ள இருப்பதாகவும், கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இது தொடர்பாக ஆலோசனை செய்ய இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது, அடிப்படையே இல்லாதது என்று கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று தான் செய்தியாளர்களிடம் பேசிய போது, தேர்தல் அல்லது கூட்டணி குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் தான் கூறியதை ஒரு சில ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த விவகாரம் குறித்தும், தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் மட்டும் விவாதிக்க கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கூட்டம் வரும் 12, 13ம் தேதிகளில் நடக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் இந்த மத்திய நிர்வாகக் குழு கூட்டம், கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய கூடவில்லை என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளதோடு ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தியை கட்சியின் நிலையாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.