அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் விவகாரம் குறித்து விஜயகாந்த்துடன் நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார். அவர் தயாரா? என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''அரசுக்கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவது தொடர்பாக விஜயகாந்த் கடந்த 5ந் தேதி கருத்து தெரிவித்து இருக்கிறார். அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறுவது வேறு, தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் என்பது வேறு. தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
ஆனால் அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறினால் அவை தமிழக அரசின் முழு கட்டுப் பாட்டில் இயங்கும். இதனால் இட ஒதுக்கீட்டின்படி அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
புதுச்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி விஜயகாந்த் குடும்பத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரிதான். இதன் நிறுவனராக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் சகோதரி ராதா உள்ளார். கல்லூரி தாளாளராக ராதாவின் கணவர் ராமச்சந்திரா உள்ளார்.
இந்த கல்லூரியில் புதுவை அரசு நிர்ணயித்த கட்டணமான 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள். இந்த கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரி புதுவை அரசு மற்றும் புதுவை பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தியும் கல்லூரி நிர்வாகம் திரும்ப வழங்கவில்லை.
விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி உள்பட 33 பொறியியல் கல்லூரிகளில் தவறு நடப்பதாக தமிழக அரசு யு.ஜி.சி.யிடம் தெரிவித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருக்கிறோம்.
அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் விவகாரம் குறித்து விஜயகாந்த்துடன் நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார். அவர் தயாரா? அவர் கேட்கும் எந்த கேள்வி களுக்கும் நான் பதிலளிக்க தயாராக உள்ளேன். மேடை, நேரம், இடம் ஆகியவற்றை விஜயகாந்தே நிர்ணயிக்கட்டும்'' என்று அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.