''நீதிமன்றம் அனுமதித்த வழக்கறிஞர் இல்லாமல் குருவை ரகசியமான இடத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறோம்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குருவை விசாரணைக்காக காவல்துறையினர் எங்கே அழைத்துக் கொண்டு போகிறோம் என்பதை அவரது வழக்கறிஞரிடம் கூட தெரிவிக்காமல் ரகசியமான இடத்திற்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். காவலர்கள் விசாரிக்கும்போது குருவுடன், அவரது வழக்கறிஞர் இருப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
ஆனால், அந்த வழக்கறிஞரிடம் கூடத் தெரிவிக்காமல் குருவை அவசர அவசரமாக வாகனத்தில் ஏற்றி எங்கோ ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். இதனை நீதிமன்றத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, குருவை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றதால் அங்கிருந்தவர்கள் அதை ஆட்சேபித்திருக்கிறார்கள்.
புகார் கொடுத்தவர்கள் மறுத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் இருந்த காவல்துறையினர், தங்களது ஆத்திரம் முழுவதையும் அப்போது தொண்டர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காட்டியிருக்கிறார்கள்.
நீதிமன்றம் அனுமதித்த வழக்கறிஞர் இல்லாமல் குருவை ரகசியமான இடத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறோம். குருவின் உயிருக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால், அதற்கான முழு பொறுப்பையும் காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் ஏற்க வேண்டும்.
இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்ட எந்தவொரு அரசும் நீண்டநாட்கள் பதவியில் நீடித்ததாக வரலாறு இல்லை. அரசின் இந்த அடக்குமுறையை சட்டப்படி எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி பாட்டாளி மக்கள் கட்சி சந்திக்கும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.