சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.389 கோடி செலவில் மாநகராட்சி மூலம் மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாநகராட்சி மூலம் தி.நகர் உஸ்மான் சாலை துரைசாமி சாலை சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம் பாலத்தின் மீது உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இருவழி வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதலமைச்சர் கருணாநிதி பொதுமக்கள் பயன் பாட்டுக்காக இந்த பாலத்தை திறந்து வைப்பார்.
இந்த பாலம் அமைவதன் மூலம் துரைசாமி சாலை, பனகல் பூங்கா, வடக்கு உஸ்மான் சாலையில் வெங்கட் நாராயணா சாலை மற்றும் தியாகராய சாலையில் ஏற்படும் வாகன நெரிசல் பெருமளவுக்கு குறையும்.
சென்னையில், ரூ.16.50 கோடியில் கோபதி நாராயண சாலை திருமலை சாலை சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படும்.
ரூ.6.03 கோடியில் ஆலந்தூர் சாலையில் நடைபெற்று வரும் வாகன பாலப் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும். ரூ.15.74 கோடியில் ரங்கராஜபுரம் ரெயில்வே சந்திக் கடவின் குறுக்கே நடைபெற்று வரும் வாகன மேம்பாலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிக்கப்படும்.
மணியக்கார ரெயில்வே சந்திக் கடவின் குறுக்கே வாகன சுரங்கப் பாதை, பெரம்பூரில் மேம்பாலம், டர்ன்புல்ஸ் சாலை செனடாப் சாலை சந்திப்பில் மேம்பாலம், ஜோன்ஸ் சாலையில் வாகன சுரங்கப்பாதை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் வாகன மேம்பாலம், வில்லிவாக்கத்தில் வாகன சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் மொத்தம் ரூ.389 கோடி செலவில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.