பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியை "கல்வி வளர்ச்சி நாள்'' என அறிவித்து, அன்றைய தினம் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியர் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் திருவுருவப்படத்தை அலங்கரித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி 24.5.2006 அன்று ஆணையிட்டார்.
அதனையொட்டி, கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் அனைத்திலும் மிகச்சிறப்பான முறையில் விழா நடத்தப்பட்டது. வரும் 15.7.2008 அன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடாக 1 கோடியே 7 லட்ச ரூபாய்க்கு அனுமதி அளித்தும்; பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து 24 லட்ச ரூபாய்க்கு அனுமதி அளித்தும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டார்.