தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு பரப்பினால் ராமதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுப.இளவரசன் கூறினார்.
கடலூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '' தொடர்ந்து ஒரு கட்சி (பா.ம.க) திட்டமிட்டு என்னை அழிக்கும் நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. நான் கடந்த 2ஆம் தேதி ஒரு வழக்கில் ஆஜராவதற்காக சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தேன். ரெட்டிச்சாவடி அருகே வந்தபோது எனது வாகனத்தை காவல்துறையினர் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது எனது வாகனத்தில் இருந்த பாருக்கான் என்பவர் நீதிமன்றத்தில் கைது ஆணை உள்ளவர் என்பதை காவல்துறையினர் தெரிவித்ததால் உடனே பாருக்கானை ஒப்படைத்தேன். எனது வாகனத்தை சோதனை செய்த காவல்துறையினர் எந்த ஆயுதமும் இல்லை என என்னை விட்டுவிட்டனர்.
ஆனால் பயங்கர ஆயுதங்களுடன் நான் சென்றதாக காவல்துறை தலைமை இயக்குனரிடம் ஒரு வழக்கறிஞர் மூலம் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். குற்றப்பின்னணி கொண்டவர் என்று சொல்லி தமிழ் மக்களிடம் இருந்து என்னை தனிமைப்படுத்தும் சதித்திட்ட முயற்சியில் பா.ம.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
எங்கள் வாகனத்தில் வெடிகுண்டு இருக்கிறது, வீச்சரிவாள் இருக்கிறது, நவீன ஆயுதங்கள் இருக்கிறது என்ற பொய் பிரசாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு பரப்பினால் மருத்துவர் ராமதாஸ் மீது வழக்கு தொடருவேன்'' என்று கூறினார் சுப.இளவரசன்.