வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பணிபுரிந்து வரும் வழக்கறிஞர் ஒருவரை மதுரையில் உள்ள டோல்கேட்டில் பணம் வசூல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு அவரை அங்குள்ள ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு, மதுரை- திருச்சி சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கை விட்டனர்.
இந்த போராட்டத்தினால் உயர் நீதிமன்றத்தின் கிளை மற்றும் 25 கீழ்நிலை நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.