Publish Date: Tue, 01 Jul 2008 (13:59 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (13:59 IST)
சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைக் கண்டித்து பா.ஜ.க. வினர் பெட்ரோல் பங்க் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக சில்லறை விற்பனை நிலையங்களின் முன்பு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்கக் கோரியும் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு பா.ஜ.க. வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. பொதுச் செயலர் தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மகளிரணி துணைத் தலைவி லலிதா சுபாஷ், இளைஞரணி துணைத் தலைவர் ரமேஷ், மாணவரணி செயலர் சதீஷ், மாவட்டத் தலைவர் பால்சிங் ஸ்ரீதர் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள் அனைவரையும் வடபழினு காவலர்கள் கைது செய்தனர்.