ஒரு உருளை கொண்ட எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு எரிவாயு சிலிண்டர் விற்பனை விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ.30 மாநில அரசு மானியம் வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு:
இந்த திட்டத்தை நிறைவேற்றும் செயல்முறை குறித்து முடிவு செய்ய எண்ணெய் நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் அகில இந்திய எரிவாயு விநியோகஸ்தர்களின் கூட்டமைப்புத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்தது.
இத்திட்டத்தை செயல்படுத்தும்போது எந்தவித நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது. அவை வருமாறு:
இந்த திட்டம் சென்னையில் துணை ஆணையர்கள் மூலமாகவும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிப்பிலும் செயல்படுத்தப்படும்.
இதற்கான நிதி நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு விடுவிக்கப்பட்டு மாவட்டந்தோறும் சம்பந்தப்பட்ட மண்டல மையங்கள் மற்றும் முதுநிலை மண்டல மையங்கள் பட்டியலை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையர்கள் ஒப்புதல் பெற்று மானியம் விடுவிக்கப்பட வேண்டும்.
திட்டம் தொடங்கு முன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முகவர்களிடம் உள்ள ஒரு சிலிண்டர் இணைப்புகள் மற்றும் இரு சிலிண்டர் இணைப்பு விவரம் மற்றும் மே 2008-ல் ஒரு சிலிண்டர் இணைப்பில் விற்பனை செய்யப்பட்ட விவரம் பெறப்பட வேண்டும்.
ஜுலை, ஆகஸ்டு மாதங்களுக்கு மே 2008 விற்பனை அடிப்படையில் முன்பணம் விடுவிக்கப்பட வேண்டும். எரிவாயு முகவர்கள் பயனாளி வாரியான விற்பனை விவரத்தை மாதந்தோறும் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மண்டல மேலாளர்கள் பட்டியலை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துணை ஆணையர்கள் ஒப்புதல் பெற்று மாதந்தோறும் மானியத்தை விடுவிக்க வேண்டும்.
எரிவாயு முகவர்கள் ஒரு சிலிண்டர் இணைப்பிற்கு விற்பனை செய்யும்போது குடும்ப அடையாள அட்டைகள் எண்களை குறிக்க வேண்டும். ஒரு சிலிண்டர் இணைப்பிற்கான விற்பனைக்கு பில் பட்டியலை முகவர்கள் தனியாக பராமரிக்க வேண்டும்.
ஒரு சிலிண்டர் இணைப்பிற்கு தயாரிக்கப்படும் பட்டியலில் மட்டும் 14.2 கிலோ சிலிண்டர்களுக்கு மாநில அரசு மானியமாக ரூ.30 கழிக்கப்பட்டும், 5 கிலோ சிலிண்டர்களுக்கு ரூ.11 கழிக்கப்பட்டும் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
பட்டியல் புத்தகங்கள் தயாரித்தல், பட்டியல் சமர்ப்பித்தல் போன்ற பணிகளுக்கு ஏற்படும் நிர்வாக செலவுகளுக்காக எரிவாயு முகவர்களுக்கு உத்தேச ஒதுக்கீடாக மாதம் ஒன்றிற்கு ரூ.1000 வழங்கப்படும்.
இத்திட்டம் ஒரு சிலிண்டர் இணைப்புகள் பெற்றுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்ற நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.