அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சோனியாகாந்தி அறுவை சிகிச்சை அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசரம், அவசியம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நான்காவது ஆண்டாக ஆட்சி நடத்தி, அது பொது தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், இடதுசாரிகளின் ஆதரவை திடீரென இழந்து விடும் கடுமையான ஒரு நிலைப்பாட்டை அமெரிக்க அணு ஒப்பந்தம் என்ற ஒன்றுக்காக, நமது நாட்டு ஜனநாயக ஆட்சியின் இலக்குகளை இழந்து விடக்கூடாது.
2020-ல் தான் அந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் நிலையில், இடையில் எத்தனையோ மாறுதல்கள் வரலாம்; வர வாய்ப்புள்ளது. நாளைய பலாவுக்காக இன்றைய களாப்பழத்தை இழப்பது அரசியல் சாதுரியமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
வரலாறு காணாத வகையில் பணவீக்கம் 11.05 விழுக்காடு இன்று உயர்ந்ததன் விளைவாக, மக்களின் அன்றாடப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, அதிருப்தியை ஆட்சியாளர்கள் மீது அள்ளிக் கொட்டி வருகின்றது. மத்திய அரசின் பொருளாதார அணுகுமுறையில் ஆன் லைன் வர்த்தகம் பேரத் தடை போன்றவைகளை செய்யவில்லை.
கூட்டணி மாநில முதல்வர்கள், முக்கிய ஆலோசகர்கள், மூத்த தலைவர்களை சோனியா கலந்து, ஓர் "அறுவை சிகிச்சை'' அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசரம், அவசியம்.
எதிர்க்கட்சிகள் விலைவாசி ஏற்றத்தினை, பண வீக்கத்தினை மூலதனமாகக் கொண்டு தேர்தல் களத்தைச் சந்திக்க ஆயத்தமாகிவிட்ட நிலையிலும், தோற்கடிப்பட்ட மதவாத சக்திகள் மீண்டும் அரியணை ஏறிட திட்டமிடும் நிலையிலும், இடது சாரிகள் உள்பட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் பொது நோக்கோடு- ஓட்டுக் கண்ணோட்டத்தைவிட, நாட்டுக் கண்ணோட்டத்தை முன்னிறுத்தி, தற்போதுள்ள முற்போக்கு கூட்டணி அரசோடு இணைந்த அரசியல் அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் நாட்டில் மீண்டும் காவிக் கொடி பறந்து, வரலாறும், மக்களாட்சியும் கறை படிந்ததாக மாறும் என்பது பொதுவானவர்களின், அரசியலுக்கு அப்பாற்பட்ட முற்போக்கு வாதிகளின் கவலையாகும். எனவே முன்னுரிமை எது என்பதை ஆளுங்கூட்டணி, ஆதரவு தரவும் இடதுசாரிகள் இருசாராருமே சிந்தித்துச் செயல்படுவது அவசியம்- அவசரம் என்று வீரமணி கூறியுள்ளார்.