பங்கேற்புக் குறிப்புகள் தொடர்பாக தான் எழுப்பிய கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க முடியாத மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பதவி விலகத் தயாரா? பதவி விலகவில்லை என்றார் பிரதமர் அவரை நீக்குவாரா?'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கேற்புக் குறிப்புகள் என்ற வர்த்தக முதலீட்டு முறைகள் வழியாக அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் முறைகேடான செயல்களுக்கு காரணமாகி விடும் என்ற கவலையுடன் நான் எழுப்பிய கேள்வி களுக்கு மத்திய நிதியமைச்சகம் சில பதில்களை அளித்துள்ளது.
ஆனால், இந்த பதில்கள் என் கேள்விகளுக்கு விடை சொல்வதற்கு பதிலாக, உண்மையை மூடி மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
இந்தியாவிற்கும், மொரீஷியஸ்சுக்கும் இடையே உள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு மொரீஷியஸ் நாட்டின் வழியாக நம் நாட்டில் முதலீடு செய்யும் சிலர் லாபத்திற்காக மூலதன வருவாய் வரியை செலுத்துவதிலிருந்து அவர்கள் தப்பித்து விடுகின்றனர். இந்த விவகாரத்தில் நிதி அமைச்சகம் எல்லா உண்மை களையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
பங்கேற்புக் குறிப்புகள் வழியாக நம் நாட்டில் முதலீடு செய்திருக்கும் எல்லா அந்நிய முதலீட்டு அமைப்புகள் பற்றிய அனைத்து விவரங்களும் நிதி அமைச்சகத்திற்குத் தெரியுமா? என்பது எனது கேள்வி? இதற்கும் சரியான விளக்கம் அளிக்கப் படவில்லை.
பயங்கரவாதிகள் இந்திய பங்குச் சந்தையில் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று கூற செபி அமைப்பிடமோ அல்லது அரசிடமோ எந்தத் தடயமும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு இது முற்றிலும் நேர் எதிரான கருத்து. இந்த இரண்டு கருத்துகளில் ஒன்றுதான் உண்மையா னதாக இருக்க முடியும். அப்படியா னால், யார் சொல்லுவது உண்மை?
ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் சென்செக்ஸ்ஸால் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. இந்த வீழ்ச்சிக்குக் காரணம் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றது தான் என்பதை செபி இணையதளத்தின் புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன. இதற்கு யாரெல்லாம் பொறுப்பு? இது தான் எனது கேள்வி. இந்த எனது கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லையே.
எனது ஆரம்ப அடிப்படையான கேள்வி இன்னமும் அப்படியே உள்ளது. இந்தக் கேள்விகளுக்கு ஏற்புடைய பதில் கூற முடிய வில்லை என்றால், மத்திய நிதி அமைச்சர் பதவி விலகத் தயாரா? அப்படி அவர் பதவி விலகவில்லை எனில், பிரதமர் நிதி அமைச்சரை நீக்குவாரா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.