தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. நீக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்ய முதலமைச்சர் கருணாநிதி மறுத்து விட்டார். `அது முடிந்து போன விஷயம்' என்றும் கூறினார்.
சென்னையில் நேற்று மாலை ஆட்சித் தலைவர்கள் மாநாடு முடிந்ததும் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியிடம், இன்று நடைபெற்ற பா.ம.க. கூட்டத்தில் குரு பேசியதெல்லாம் உண்மைதான். பேசி 4 மாதமாகிறது என்றெல்லாம் சொல்லி இருக்கிறாரே? அதற்கு உங்களுடைய பதில் என்ன? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, காலதாமதம் ஆனால் பேசிய பேச்சு மறைந்து விடுமா? என்றார்.
பா.ம.க.வை விலக்குவது பற்றிய முடிவு தி.மு.க. மற்ற கட்சிகளையெல்லாம் கலந்து கொள்ளாமல் எடுத்து விட்டதாக சொல்கிறார்களே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது எங்கள் கட்சிக்குள் எடுக்கின்ற முடிவு. மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு, ஆரம்பத்திலேயே அவர்களுடைய கட்சிக்கு தரப்பட்ட போது, எல்லா கட்சிகளையும் கேட்டுக் கொண்டு கொடுங்கள் என்று சொல்லப்படவில்லையே? என்றார் முதல்வர் கருணாநிதி.
தற்போது திடீரென்று ஏதோ இந்திரா காந்தியை தி.மு.க. கொலை செய்ய முயற்சித்தது என்றெல்லாம் சொல்கிறாரே? என்று கேட்டபோது, காதிலே பூ வைத்திருப்பவர்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இது என்று முதல்வர் பதில் அளித்தார்.
முதல்வர் கருணாநிதியிடம், திருமாவளவன் முயற்சி எடுத்து, பா.ம.க.வையும் மீண்டும் சேர்ப்பதற்காக கட்சித்தலைவர்களையெல்லாம் சந்தித்து வருகிறார். உங்களையும் சந்தித்து கேட்டதாக சொல்லி இருக்கிறாரே? என்று கேட்டனர் செய்தியாளர்கள்.
இதற்கு பதில் அளித்த கருணாநிதி, ஆமாம். என்னைக்கேட்டார். அவ்வளவு மோசமாக பேசிவிட்டு, ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டேன் என்று சொன்னால், அவர்களோடு எப்படி ஒன்றாக கூட்டணி வைக்க முடியும் என்று கேட்டேன். வருத்தம் தெரிவிப்பார்கள் என்று உறுதியளித்துவிட்டு, அந்த நம்பிக்கையோடு போனார் என்றார்.
பா.ம.க. வருத்தம் தெரிவித்தால்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதெல்லாம் முடிந்து போன விஷயம் என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.
குரு மீது ஏதாவது வழக்கு? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதெல்லாம் எனக்குத் தெரியாது. சட்டப்படி நடைபெற வேண்டியது அது என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.