தஞ்சாவூர் அருகில் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை கீழவாசல் தபீர்குளம் ரோட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (45), இவரின் மகன் செந்தில் (17) மற்றும் முத்துகுமார் (35), வெங்கடேஷ் (28), ராஜேஷ் (27), நல்லசிவம் (35), முருகேசன் (34) ஆகிய 7 பேர் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்று ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் செங்கிப்பட்டி- திருமலை சமுத்திரம் இடையில் வந்து கொண்டிருந்தபோது பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பூருக்கு விறகு ஏற்றுக்கொண்டு வந்த லாரி அய்யப்ப பக்தர்களின் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் நல்லசிவம், முருகேசன், ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். பாலசுப்பிரமணிம், முத்துகுமார் ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும், செந்தில், வெங்கடேஷ் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து தஞ்சை டி.ஐ.ஜி. ஆபாஷ் குமார் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிவிட்ட லாரி ஓட்டுநர் தேடப்பட்டு வருகிறார்.