பெண்களும் அர்ச்சகராகும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் என திமுக மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. மகளிர் அணியின் முதல் மாநில மாநாடு கடலூரில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று 2-வது நாள் மாநாடு நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: பெண்களை விளம்பரப் பொருளாக சித்தரிக்கும் போக்கை மாநாடு கண்டிக்கிறது.
திரைப் படங்களில் தொலைக் காட்சிகளில் மகளிருக்கு எதிரான குற்றங்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளுக்கும் மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
முதல்வர் தனது பிறந்த நாளில் தெரிவித்தபடி, சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து மாநில மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும்.
அதன் தொடக்கமாக தமிழ்மொழியை மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்ற, 1966-ம் ஆண்டு தி.மு.க மாநாட்டு தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமக்கூலியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மகளிர் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றியதற்கு முதல்வருக்கு நன்றி.
பெண்களும் அர்ச்சகர் ஆகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
தங்கும் இடமின்றி தவிக்கும் அரவானிகளுக்கு குயிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும். பணிபுரியும் மகளிருக்கு தங்கும் விடுதிகளை அரசு கட்டித்தர வேண்டும்.
மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஜப்பான் சென்று நிதிஉதவிக்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி.
ஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகையை உயர்த்தியதற்கும், ஆதரவற்றோருக்கு தொடர்ந்து உதவித் தொகை வழங்கி வருவதற்கும், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வருமுன்காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கும் அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.