சென்னையில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்தால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கெடுபிடியை கண்டித்து பெட்ரோல், டீசல் ஒப்பந்த லாரிகளின் உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள் சங்கத்தினர் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 450க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாமல் தண்டையார்பேட்டை, எழில்நகர், கொருக்குப்பேட்டை உள்பட பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த போராட்டம் குறித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் கூறுகையில், `பிளாக் லிஸ்ட்' என்ற பெயரில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சில லாரிகளை உள்ளே வர தடை விதிக்கிறார்கள். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பெட்ரோல், டீசலில் ஏதும் தவறு நடந்தால், அல்லது வழியில் கள்ளத்தனமாக யாரும் எடுத்தால், அந்த லாரிகளை பிளாக் லிஸ்டில் சேர்ப்பார்கள்.
ஆனால் தற்போது லாரியில் போல்ட், நட்டு லூசாக இருந்தால் கூட அந்த லாரியை பிளாக் லிஸ்ட் என்று கூறி அதிகாரிகள் லாரிகளையும், ஓட்டுனர், கிளீனர்களையும் உள்ளே வர அனுமதி மறுக்கிறார்கள். இவர்கள் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு லாரியில் நட்டு லூசாக இருந்ததற்கு அந்த லாரியை பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். இதை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம் என்று கூறினார் வரதராஜன்.
பெட்ரோல் டேங்கர் லாரிகள் ஓடாததால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.