விடுதலைப்புலிகளின் ஊடுருவலை தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் 12 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறியுள்ளார். ஜெயலலிதா கூறிய புகாருக்கு டி.ஜி.பி. மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டின் பாதுகாப்பிற்கு கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த `கடலோர பாதுகாப்புத் திட்டம்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், அத்திட்டத்தின் கீழ், மாநில அரசு அமைக்க வேண்டிய 12 கடல் சார் காவல் நிலையங்களை அமைக்கவில்லை என்றும், தமிழகம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகிறது என்றும் அறிக்கை ஒன்று செய்தித் தாள்களில் வெளிவந்துள்ளது. இச்செய்தி உண்மைக்கு மாறானது.
2006-ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு, தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில் ஏழு காவல் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 5 காவல் நிலையங்கள் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட ஏழு கடலோர காவல் நிலையங்களும் இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் இயங்க உள்ளன.
கடலோர கிராமங்களில் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், மீனவர்களுக்கு தக்க பாதுகாப்பும், உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர், மாநிலத்தில் தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயல்கள் வேரூன்றாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடலோர பாதுகாப்பை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறை தலைமை இயக்குனர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா புகாருக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.