தாழ்த்தப்பட்டவர்களுகளும் தங்கள் உரிமைகளுக்காக போராட முன் வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் திருமாவளவன் கூறினார்.
ஈரோட்டில் குறவர் பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் குறவர் இன மக்களின் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியது, ஒடுக்கப்பட்ட மக்களும் ஆட்சியில் பங்கு பெறும் காலம் விரைவில் வரவுள்ளது. இந்த மண்ணில் மைந்தர்கள் இந்த மண்ணை ஆளவேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் தங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெரிய வேண்டும். இது எயிட்ஸ் நோயைவிட கொடுமையானது.
குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் இந்த நாட்டின் பூர்வீக மக்கள். இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜ்ஜார் மக்களை போல் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களும் தங்கள் உரிமைக்காக போராட முன்வர வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார். கூட்டத்தில் கட்சி பொருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.