சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 92.84 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் சி.பி.எஸ். 12ஆம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 5 லட்சத்து 48 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் மட்டும் 48,623 பேர் தேர்வு எழுதினார்.
சென்னை மற்றும் அஜ்மீர் மண்டலங்களுக்கான சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டது. சென்னையில் 72 மையங்களில் 5,318 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,086 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. தேர்வுத்துறை இணை செயலாளர் நாக ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஆண்டு 82 விழுக்காடு பேர் தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 92.84 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்த வரை 95.69 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நமது மண்டலத்தில் புதுச்சேரியில் தான் 97.75 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் 2 ஆயிரத்து 671 பேர் உள்ளனர். இவர்கள் ஜூலை 19ஆம் தேதி மீண்டும் தேர்வு எழுதலாம்'' என்றார்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர்கள் அகிலேஷ் நாராயண், ராகுல்தாஸ் ஆகிய இருவரும் 500-க்கு 488 மார்க் எடுத்த சாதனை படைத்துள்ளனர். இதே போல் முகப்பேர் டி.ஏ.வி. பள்ளி மாணவி வள்ளி மீனாவும் 488-மார்க் எடுத்து சாதனை படைத்தார்.
டெல்லி, கவுகாத்தி (அசாம்) அலகாபாத் ஆகிய மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகள் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.