'தசாவதாரம்' படத்தில் கடவுளை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்று படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தசாவதாரம் படத்தில் இந்து கடவுளை அவமதிக்கும் காட்சியை நீக்கா விட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில், நாத்திகனையும் ஆத்திகனாக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
24 மணி நேரமும் அந்த பெருமாளையே வணங்கிக் கொண்டிருக்கும் நான் எடுக்கும் படத்தில் அது போன்ற காட்சிகளை வைப்பேனா? யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.
குறிப்பாக இந்து மதத்தை புண்படுத்தும் நோக்கில் இப்படத்தில் காட்சியோ, வசனங்களோ இருக்காது. படத்தின் டிரைலரை பார்த்து விட்டு ஒட்டு மொத்தமாக ஒரு முடிவுக்கு வர கூடாது. படத்தில் எந்தவிதமான காட்சிகளையோ, வசனங்களையோ வெட்டும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.