அ.இ.அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் மீது சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். அதன் மீது தீர்ப்பளித்த அவைத் தலைவர், இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அமைச்சர் துரைமுருகன் எழுந்து ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ஒரு உறுப்பினர் இந்த அவையில் ஒரு கருத்தை தெரிவித்தால் அது உடன்பாடு இல்லை என்றால் அவைத் தலைவர் அனுமதி பெற்று அதனை மற்றொரு உறுப்பினர் மறுக்கலாம்.
ஒரு உறுப்பினரின் கருத்து தொடர்பாக பதில் சொல்ல இந்த அவையில் வாய்ப்பு இருக்கும்போது இங்கு பேசிய உறுப்பினரைப் பற்றியும், அவர் தெரிவித்த கருத்து பற்றியும் அதற்கு தொடர்பு இல்லாத அமைச்சரைப் பற்றியும் வெளியில் அறிக்கை விடுவது எந்த வகையில் நியாயம்?
இங்கே அதற்கு உரிய பதில் அளிக்காமல் வெளியே சென்று கோவை தங்கம் பற்றியும், அமைச்சர் ஆற்காடு வீராசாமி பற்றியும் தவறான கருத்துப்பட செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது இந்த அவையின் மரபுக்கு உகந்ததல்ல. சரியான கருத்தாக இருந்தால் பதிவாகும்; தவறான கருத்தாக இருந்தால் திருத்தப்படும் என்ற எண்ணம் இருந்தால் தான் உறுப்பினர்களால் சிறப்பாக பணியாற்ற முடியும்.
எனவே, மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது செங்கோட்டையன் அறிக்கை அவையின் உரிமை மீறிய செயலாக உள்ளது என்று கருதுகிறேன். இதனை அவைத் தலைவர் உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவைக்கு விடுமுறை இருந்ததால் அந்த கருத்து பற்றி வெளியில் தவறான செய்திகள் வந்ததால் அதற்கு விளக்கம் அளிப்பதற்காக நான் அறிக்கை வெளியிட்டேன் என்றார்.
இதன் மீது தீர்ப்பளித்த அவைத் தலைவர் ஆவுடையப்பன், 'அவை விதி 226ன் கீழ் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு உரிமை குழுவுக்கு இப்பிரச்சனையை அனுப்பி வைக்கிறேன்' என்று கூறினார்.