தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ள மே 2ஆம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்திலிருந்து தமிழக வணிகர்களுக்கு விலக்கு அளிக்கும்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து மே 2ஆம் தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்த இருப்பதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது.
இன்றைய அநியாய விலை ஏற்றத்துக்குக் காரணங்களாய் அமைந்துள்ள ஆன்லைன் வர்த்தக சூதாட்டம், மதிப்புக் கூடுதல் வரி, சேவை வரி, சில்லரை வணிகம் உள்ளிட்ட சுயதொழில்களில் ஏகபோக ஆதிக்கம், தேச விரோத ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள், தனியார் மயம் என்கிற பெயரில் சேவைத் துறைகள் தாரை வார்க்கப்படுதல் ஆகிய அனைத்து தவறான நடவடிக்கைகளுக்கும் உலக வர்த்தக ஒப்பந்தமே அடிப்படை.
அதனால் சுயவேலை வாய்ப்புகள் பறிபோகும், விலைவாசிகள் கடுமையாக உயரும் என்பதை அறிந்திருந்தும், ஆட்சிக்கு வரும் எல்லா கட்சிகளுமே அந்த தேச விரோத ஒப்பந்தத்தை உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பது மிக மிக வேதனைக்குரியது. கடுமையான விலைவாசி உயர்வை எதிர்த்து உடனடியாகப் போராட வேண்டியது அவசியமானதே.
நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தார்மீக ஆதரவைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். எனினும் மே 5 வணிகர் தினத்தை ஒட்டி சென்னை, தீவுத்திடலில் நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான வணிகர்கள் மே 5 ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்துக்காகவும் கடைகளை அடைப்பது இயலாததாகும்.
எனவே மே 2 பொது வேலை நிறுத்தத்திலிருந்து தமிழக வணிகர்களுக்கு விலக்கு அளிக்கும்படி தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களை கேட்டுக் கொள்கிறோம் என்று வெள்ளையன் கூறியுள்ளார்.