''அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தினார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.
சென்னை புரசைவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:
நியாயவிலை கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அளவை ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு குறைத்துள்ளதை கண்டிக்கிறோம்.
மக்களின் தேவை அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்பட 15 அத்தியாவசிய பொருட்களை நியாயவிலை கடை மூலம் வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப 25 விளைபொருட்களின் முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விற்பனை விலையை குறைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையை தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திருத்த வேண்டும் என்று வரதராஜன் கூறினார்.