தேவர் சிலை அவமதிப்பை கண்டித்து ஏப்ரல் 24ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் இன்று மதுரை வந்தார்.
அவர் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சென்று சந்தனம், பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையில் களங்கம் ஏற்படுத்தி இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்று அவமதிப்பு செய்வதை மன்னிக்க முடியாது.
இனிமேலும் தேவர் சிலை அவமதிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் வன்முறை வெடிக்கும் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது. உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும்.
தேவர் சிலை அவமதித்த உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், இதுபோன்ற தொடராமல் தடுத்து முற்றுப்புள்ளி வைக்கவும் அகில இந்திய பார்வர்டு பிளாக் ஏப்ரல் 24ஆம் தேதி முழு அடடைப்பு நடத்த முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக நிர்வாகி கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளோம்.
அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். முடியாவிட்டால் நாங்களே பாதுகாப்பு கொடுப்போம் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.