''வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்த பிறகும் போராடுவது தேவை இல்லாதது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிவபுண்ணியம் ஆகியோர் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க வேண்டும்.
ஏற்கனவே சிலர் உதவி பெற்றிருந்தாலும் விடுபட்டவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி கூறுகையில், வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரால் சிலர் பாதிக்கப்பட்டனர். அது பற்றி அறிய நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு விசாரணைக் ஆணையம் அமைக்கப்பட்டது. அவர்கள் அறிக்கை தரும் முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக ரூ.20 லட்சம் நிதி கொடுக்கப்பட்டது.
அதற்கு பிறகு ஆணையம் அறிக்கை கிடைத்து, அதில் 89 பேர் பாதிக்கப்பட்டதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது போல நிவாரணமாக ஒரு கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு ரசீதுகளும் பெறப்பட்டுள்ளது.
இவ்வளவு நடந்த பிறகும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விசாரணைக் ஆணையம் கொடுத்த பட்டியல்படி நிதி வழங்கப்பட்டு விட்டது. கர்நாடக அரசு தான் நிதி உதவி வழங்க வேண்டும். எனவே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் கர்நாடகாவை எதிர்த்து தான் நடத்த வேண்டும்.
இந்த போராட்டம் பற்றி நான் கேள்விப்பட்டதும் தா.பாண்டியனை அழைத்து நிதி கொடுத்த ஆதாரங்களை காட்டினேன். தமிழக எல்லைக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் கடமையை செய்து விட்டோம். அதன் பிறகும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல போராட்டம் நடத்துவது சரியான முன் மாதிரி அல்ல.
பிரச்சினை முடிந்து விட்ட பிறகு பிரச்சினை இருப்பதாக கூறி போராடுவது தேவை இல்லாதது என்பதை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யார் யார் பெயர் விடுபட்டது என்று தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். அதற்காக போராட்டம் நடத்துவது நியாயமா?
கர்நாடக அரசு இதை மட்டுமா கொடுக்கவில்லை. காவிரி முதல் ஒகேனக்கல் வரை எல்லாவற்றையும் தான் தர மறுக்கிறார்கள். அதை உரிய முறையில் போராடி பெறுவோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.