''காவல் நிலையங்களில், காவல் துறையினர் விழிப்புடன் தூங்காமல் பணியாற்றுகிறார்களா? என்று சோதனை நடத்தும் அளவுக்குக் தமிழகத்தில் காவல்துறை சீரழிந்து கிடக்கிறது'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதிகளின் புகலிடம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவிற்கு தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டில் தீவிரவாதிகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டுப்போய் விட்டது.
கடந்த 19ஆம் தேதி கொடைக்கானல் மலைப்பகுதியில் நடந்த சம்பவம் இதனை மேலும் நிரூபிக்கும் விதமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வடகவுஞ்சி ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.
கருணாநிதியின் ஆட்சியில் தீவிரவாதிகள் பரிணாம வளர்ச்சி அடைகிறார்கள் என்பதையே தமிழகத்தில் தற்போது நிலவும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தி.மு.க அரசு நீடிக்கும் வரை தமிழ் நாட்டில் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்பது இயலாத காரியம்.
திமுக ஆட்சியில், காவல் துறையினர் மீதே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. காவல் நிலையங்களில், காவல் துறையினர் விழிப்புடன் தூங்காமல் பணியாற்றுகிறார்களா? என்று சோதனை நடத்தும் அளவுக்குக் காவல்துறை சீரழிந்து கிடக்கிறது. எனவே தீவிரவாத, பயங்கரவாத, நக்சலைட் இயக்கங்களை காவல் துறை ஒடுக்கும் என்று நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்து விட்டனர் என்று ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.