தி.மு.க உள்கட்சி தேர்தலில் நடந்த தாக்குதல் குறித்து சட்டப்பேரவையில் இன்று பிரச்சனை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் எதிர்க்கட்சி தலைவர் துணைத் தலைவர் பன்னீர் செல்வம், உடுமலைப்பேட்டையில் நடந்த ஒன்றிய தி.மு.க. அமைப்பு தேர்தலின் போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேச அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அவைத் தலைவர் ஆவுடையப்பன், அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் ஒரு பிரச்சனை பற்றி கூறியிருக்கிறீர்கள். தி.மு.க உறுப்பினர் லட்சுமணன், ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.இ.அ.தி.மு.க.வினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு, அடிதடி ரகளையாகி, பொதுமக்கள் அலறியடித்து ஓடியதை பற்றி விவாதிக்க தாக்கீது கொடுத்திருக்கிறார். எனவே, இதுபோன்ற உள்கட்சி விவகாரங்களையெல்லாம் இங்கு அனுமதிப்பதா என்பது குறித்த விடயம் எனது ஆய்வில் உள்ளது என்றார்.
அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், உடுமலைப்பேட்டை தொகுதியில் நடந்த ஆளுங்கட்சி தேர்தலில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் சட்டம்ஒழுங்கை காப்பாற்ற காவல் துறை துணை ஆணையர் சமரசம் செய்ய சென்றபோது அவரும் தாக்கப்பட்டுள்ளார் என்றார்.
இந்த அனைத்து விடயங்களும் என் ஆய்வில் இருக்கிறது. அவற்றை எடுப்பதும், எடுக்காததும் எனது அதிகாரத்திற்கு உட்பட்டது. என்னை நீங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்று அவைத் தலைவர் கூறினார்.
நாங்கள் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. அவையின் கவனத்திற்கு தான் கொண்டு வருகிறோம். உடுமலைப் பேட்டைக்கும், ஆண்டிப்பட்டிக்கும் என்ன சம்பந்தம்? என்று பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவைமுன்னவர் அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, தங்கள் கட்சியின் நோக்கத்தை தெரிவிக்க இந்த அவையின் நேரத்தை பயன்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. எனவே உரிமையில்லாத விஷயத்தை, அனுமதிக்காத விஷயத்தை மேலும் மேலும் பேசுவது சரியானதல்ல. எனவே அவையில் இதுபோன்ற விடயங்களை விவாதிக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.
இதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் நின்று கொண்டே இருந்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியபடி நின்று கொண்டிருந்தனர். பேச அனுமதி வழங்காததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று கோஷமிட்டு சென்றனர்.