சிங்கள பட நிறுவனம், பிரபாகரன் பெயரில் தயாரித்த சினிமாவை வெளியிடுவதற்கான தடையை ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் படம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பிரபாகரன் பெயரில் கொழும்பு படநிறுவனம் ஒன்று சிங்கள படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
இலங்கையில் சிங்களர்களை தமிழ் மக்கள் அடக்கி வைத்திருப்பதுபோல காட்சிகள் மிகைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. உண்மையில், அங்கு தமிழர்கள்தான் ஒடுக்கப்பட்டு, உரிமை பறிக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இப்படத்தில் அனைத்து காட்சிகளும் உண்மையை மறைத்து, திரித்து படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் படம், தமிழர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இந்த படத்தை ஜெமினி கலர் லேப்பிலேயே முடக்கி வைத்து, அழித்துவிடும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை முதலாவது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஏ.சேதுமாதவன் முன்பு நேற்று நடந்தது.
இந்த வழக்கில், பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் பதில் மனு தாக்கல் செய்யாததாலும், ஜெமினி கலர் லேப் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டதாலும் இடைக்கால தடையை வரும் ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.