''தமிழகத்துக்குள் ஓடும் நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மூன்று நதி இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்'' என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு; காவிரி - அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு; பெண்ணையாறு - செய்யாறு ஆகிய மூன்று இணைப்புத் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காவிரி - வைகை - குண்டாறு இணைப்பில் உள்ள முதல் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்ணையாறு - செய்யாறு இணைப்புத் திட்ட அறிக்கை இன்னும் இரண்டு மாதத்துக்குள் தயாரிக்கப்படும்.
இத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன் திட்டத்தின் கீழ் இத் திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற அனுப்பப்பட உள்ளன.
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் மற்றும் காவிரியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுதல் ஆகியவற்றுக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் முறையே ரூ.369 கோடி, ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியை எதிர்நோக்கி, மாநில நிதியிலிருந்து இந்த இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.