என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதத்தில் 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், 8.33 விழுக்காடு போனஸ் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13 பேர் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் வேண்டுகோளை ஏற்று கடந்த 7ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் கைவிட்டப்பட்டது. ஆனால் ஒரு சில சங்கங்கள் மட்டுமே தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் பாபுராவ் இன்று கடலூர் ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில், ஒப்பந்த தொழிலாளர் 2006-07ஆம் ஆண்டுக்கான போனஸ் இன்னும் 2 மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கப்படும். இதனால் என்.எல்.சி. ரூ.9 கோடி செலவாகும்.
கடந்த 10 நாட்களாக என்.எல்.சி.யில் நடந்த போராட்டத்தால் எந்த உற்பத்தியும் பாதிக்கப்படவிலலை. இப்போது 90 விழுக்காடு பேர் வேலைக்கு திரும்பி விட்டனர் என்றார்.
பணி நிரந்தரம் சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் பாபுராவ் தெரிவித்தார்.