அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் சில பணிகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைத்து வெளியிடப்பட்ட அரசாணை உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள 14 நல வாரியங்களில் - பதிவு பெற்றுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து உதவித் திட்டம், ஓய்வூதியத் திட்டம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தொழிலாளர் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நல வாரியப் பணிகளில்; நல வாரியங்களின் உதவிகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் அவற்றைச் சரிபார்த்தல் தொடர்பான பணி மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையின் கீழ் செயல்படும் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்து; அரசு 2008, மார்ச் மாதம் ஆணையிட்டது.
ஒருசில அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு வெளியிட்ட இந்த ஆணை, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்திற்கு முரணானது என்று வழக்கு தொடுத்தன.
தொழிலாளர் துறை மற்றும் வாரியங்களின் நிர்வாக அமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை பற்றியும், வாரியங்களின் உதவிகளைப் பெறுவதற்குக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளைப் பற்றியும், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின்கீடிந அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவுடன் கலந்துபேசி உரிய திட்டம் வகுத்து, தேவையான திருத்தத்தைச் செய்து, அதன்பிறகு அரசாணையை நடைமுறைப்படுத்த அரசு தயாராக இருக்கிறது என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையொட்டி வழக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
அரசாணையைத் தடை செய்ய வேண்டுமென்று ஒருசில அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.