''நாடு நன்மையடைய படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்'' என கவிஞர் வைரமுத்து கூறினார்.
திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லலூரி ஆண்டு விழாவில் அவர் பேசியது:
கலைக்கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது. ஆனால் பொறியியல் கல்லூரியில் அது இல்லை. அங்கு தமிழும், கவிதையும் நடமாட வேண்டும். தமிழை விட்டு தள்ளியிருக்கிற கல்லூரிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அறிவியல் தொழில்நுட்பம் என்ற பாம்போடு போராடும் போது அருகம்புல் என்ற தமிழ்தான் நோய்க்கு மருந்தாகும்.
தமிழை சுவைக்க வேண்டும். அருந்த வேண்டும். தமிழை உயிருக்கு உயிராக நேசிக்க வேண்டும். இதற்காக வேணும் தமிழ் பக்கம் திரும்ப வேண்டும். படித்த நீங்கள் படிக்காத ஒருவரை படிக்க வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊழல்களை தாண்டி இந்தியா வளர்கிறது. படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். உங்களை நேர்மையான அரசியலுக்குள் கொண்டு செல்ல வேண்டும்.
நாட்டுப்பற்று உள்ளவர்கள், சமூகத்துக்கும், சமுதாயத்துக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அறிவியல் தொழில்நுட்ப அறிவு பெற்ற அரசியல்வாதிகளால்தான் நாடு வளம் பெறும். நல்ல திட்டம் செயல்படுத்தப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவங்கும் போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் மட்டுமே இந்தியாவின் முதன்மை நாடாக தமிழகம் விளங்கும்.
இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் குஜராத் மாநிலத்தை அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்குள்ளும் திறமை இருக்கிறது. திறமையை வெளிப்படுத்த தயக்கம் காட்டக்கூடாது. தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும். சந்தேகங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு, முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். தயக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியாது. முதலில் முந்திக்கொள்கிறவன் கவனிக்கப்படுகிறான்.
நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது அதிகாரிகளின் கண்களை பார்த்து பேச வேண்டும். மனதில் பட்டதை சொல்ல வேண்டும். யாரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். எதிலும் உண்மையாக இருங்கள். அசலாக இருப்பவன் கவனிக்கப்படுகிறான் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.