தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்கு உடனடியாக ரூ.1,140 கோடி வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய குழுவிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பெய்த பெருமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாய பயிர்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனை சீரமைப்பதற்கென தேவைப்படும் நிதியைக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசால், மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையில், மத்திய செலவினத்துறை துணை இயக்குநர் தீனாநாத், மத்திய வேளாண்துறை, புகையிலை வளர்ச்சி இயக்குநர் (பொ) டாக்டர் கே.மனோகரன், மற்றும் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை கண்காணிப்புப் பொறியாளர் எம்.ஜே.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழு கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேத விவரங்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர், அரசு செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் இக்குழுவினர் கலந்தாய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் பெரியசாமி, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட சேத மதிப்பீட்டு அறிக்கைகளை ஒருங்கிணைத்து மொத்த சேத மதிப்பான ரூ.1,140 கோடியை தேசிய பேரிடர் எதிர்பாரா செலவின நிதியிலிருந்து வழங்கக்கோரி உடனடியாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்படி மத்திய குழுவினரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சேதம் குறித்த அறிக்கையினை மத்திய அரசிற்கு விரைவில் சமர்ப்பிப்பதாக மத்திய குழுவினர் உறுதி அளித்தனர்.