திண்டிவனம் நகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்த வருகிற 11 ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படுவதில்லை என்றும், சுத்தமான குடிதண்ணீர், குப்பைகளை அகற்றுதல் போன்ற அடிப்படைப் பணிகள் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் முடங்கிப் கிடப்பதாகவும், மேலும் குடி தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதால் காலரா, வாந்தி, பேதி போன்ற வியாதிகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
திண்டிவனம் நகராட்சியின் இது போன்ற அலட்சியப் போக்கு காரணமாக அண்மையில் 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இதில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்து விட்டதாகவும் தெரிய வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய செயலற்ற தன்மையினால், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தற்போது திண்டிவனத்தில் நிலவுகிறது.
திண்டிவனம் நகராட்சியின் செயலற்ற தன்மையினாலும், திமுக அரசின் மெத்தனப் போக்கினாலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்க்கத் தவறிய திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இன்றி இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், வருகின்ற 11.4.2008 காலை 10 மணியளவில் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.