தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில் குளங்களையும் சிறப்புத் திட்டத்தின் கீழ் சீரமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளிக்கையில், “படிப்படியாக அனைத்து கோயில்களிலும் திருக்குளங்கள் மற்றும் தேர்கள் அனைத்தும் ஒரு சிறப்பு திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் அனுமதியை பெற்று சீர் செய்யப்படும்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் 40 ஆயிரம் திருக்கோயில்கள் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கோயில்களில் குட முழுக்கு நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோயில்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.
திருத்தணி கோயிலில் 9 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றியுள்ள 31 குளங்களும் சீர்படுத்தப்படும்.” என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.