நமது நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் மாநில வன ஆணையத்தை அமைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆணையத்தின் தலைவராக ராஜாராமன், ஆணைய உறுப்பினராக திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எல்.கண்ணன், உறுப்பினர் செயலராக வனத்துறை செயலர் பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணையத்தின் தலைவரும், உறுப்பினர்களும் மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தனர்.
வனக் கொள்கை மற்றும் சட்ட திட்டங்களை பரிசீலித்து மக்கள் நலன் கருதி மாற்றி அமைக்க பரிந்துரைத்தல், வன அலுவலர்களின் பணி நிலவரத்தை ஆராய்ந்து பரிந்துரைத்தல், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வன மேலாண்மையின் அபிவிருத்திக்காக பரிந்துரை செய்தல் ஆகியவை மாநில வன ஆணையத்தின் செயல்பாடுகளாக அமையும்.
பொதுமக்களுக்கும், வன அலுவலர்களுக்கும் இடையே இணக்கமான நல்லுறவை ஏற்படுத்த வழிமுறைகளை கண்டறிந்து பரிந்துரைப்பதும் இதன் முக்கிய பணியாகும்.
வன அதிகாரிகள், பழங்குடியினர், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசித்து கருத்துக் கணிப்பு மேற்கொண்ட பிறகு ஆணையத்தின் பரிந்துரைகள் முடிவு செய்யப்படும். தமிழ்நாடு வன ஆணையம் ஓராண்டுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும்.