''கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தொகுதி குலசேகரம் என்ற இடத்தில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் லீமா ரோஸ், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தொகுதியில் உள்ள குலசேகரத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் (26), ராஜேந்திரன் (40) ஆகியோர் இடி தாக்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஏழை கூலித் தொழிலாளிகள் என்பதால் அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று லீமா ரோஸ் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் கருணாநிதி, உயிரிழந்தவர்களின் குடும்ப உதவி நிதியாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்த 3 பேருக்கும் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் உரிய சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நிதியுதவியை அவர் வழங்குவார் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.