கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வன்முறைக்கு பலியாகிவிடக் கூடாது என்பதால்தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடு இந்த முடிவை அறிவிக்க நேர்ந்தது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் கருணாநிதியிடம், கனிமொழிக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டீர்கள் என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே? என்ற கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த முதல்வர், “கனிமொழிக்கு அமைச்சர் பதவியை கர்நாடக அரசாங்கமா கொடுக்கும்? அதற்கான அதிகாரம் அவர்களுக்கா உள்ளது? இப்படிக்கு பதிலுக்கு பதில் சொல்லி மண்ணை வாரி தூற்ற விரும்பவில்லை” என்றார்.
கேள்வி நேரத்திற்கு முன்பே ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர 56-வது விதி இருக்கிறது என்று ஜெயலலிதா கூறுகிறாரே? என்று கேட்டதற்கு, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றால் முன்னதாகவே அவையில் தீர்மானம் கொண்டு வந்து எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் முடியாது என்றால் கூட அது நிறைவேறாது என்றார்.
கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு தான் நீங்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, “ஒகேனக்கல் திட்டத்திற்கும் கர்நாடக தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் என் தமிழனை பற்றிதான் கவலைப்படுகிறேன். அவன் அடிபடக் கூடாது என்பதுதான் எனது நோக்கம். இத்திட்டத்தை பொறுத்த அளவில் இது ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட திட்டம். பொதுவாக இரு மாநிலங்களிலும் அமைதி ஏற்பட வேண்டும்.
கர்நாடகத்திலும், தமிழகத்திலும் உள்ள இளைஞர்கள் ரத்தம் சிந்தக் கூடாது. அமைதி ஏற்பட வேண்டும் என்றுதான் இந்த முடிவை எடுத்தேன். இப்போதைய சூழ்நிலையில் கலவரத்திற்கு விதை ஊன்றப்பட்டிருக்கிறது. கர்நாடக தேர்தலில் வாக்களிப்போர், வேட்பாளர்கள், தேர்தலில் பணிபுரிவோர் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ், தமிழர்கள் என்றால் ஒவ்வாமையுடன் கர்நாடகத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். எனவே, அங்கு வாழும் தமிழர்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்ற வேண்டும்.
அவர்கள் வன்முறைக்கு பலியாகிவிடக் கூடாது என்பதால்தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடு, ஒரு இந்தியன் என்ற பரந்த நோக்கத்தில் இந்த முடிவை அறிவிக்க நேர்ந்தது. ஆனால் இதனை தமிழ்நாட்டுக்கு நான் செய்த துரோகம் என்று சிலர் கூறி வருகிறார்கள். துரோகத்திலேயே திளைத்த அ.இ.அ.தி.மு.க.வும், துரோகத்தின் அரிச்சுவடி கூட படிக்காத ம.தி.மு.க.வும் இப்படி அறிக்கை விடுகிறார்கள்” என்று கூறினார்.
ஒகேனக்கல் திட்டத்தை நீங்கள்கைவிட்டு விட்டதாக ஜெயலலிதா கூறுகிறாரே? என்ற கேள்விக்கு, “கையும் இருக்கிறது திட்டமும் இருக்கிறது. இந்த திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டது” என்றார்
காங்கிரஸ் சதி செய்து தேர்தல் லாபம் அடைவதற்காக உங்களை பயன்படுத்தி இருப்பதாக எடியூரப்பா கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், “இது நிஜமில்லப்பா” என்றார்.
ரஜினியின் பேச்சுக்கு கர்நாடகத்தில் கண்டனம் எழுந்து உள்ளதே? என்று கேட்டபோது, இதற்கு ரஜினி பதில் சொல்லி விட்டார் என்றார்.
மத்திய அரசு மவுனம் ஏன்?
ஒகேனக்கல் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் மத்திய அரசு மவுனமாக இருக்கிறதே? என்று கேட்டபோது, மத்திய அரசுக்கு மவுனமாக இருப்பது எப்போது, வாய் திறப்பது எப்போது என்பது தெரியும். காத்திருப்போம் என்று கூறினார்.
வெளிநாட்டு உதவி பெறாமல் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என்று ராமதாஸ் கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, வெளிநாட்டு உதவி பெறாமல் நிறைவேற்றும் திட்டங்கள் இருந்தால் அத்துடன் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று பதில் அளித்தார் முதல்வர்.
செய்தியை நம்ப வேண்டும்!
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று கூறி இருக்கிறாரே? என்று கேட்டபோது, எஸ்.எம்.கிருஷ்ணா என்னுடன் தொலைபேசியில் பேசும் போது, இந்த செய்தியை நீங்கள் நம்ப வேண்டாம். நான் உச்ச நீதிமன்றம் செல்லப்போவதில்லை என்று கூறினார் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று முன்னாள் முதல்வர் கிருஷ்ணா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.