கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்துவதற்கு தனி தேர்தல் ஆணையம் அமைப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மானிய கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து அமைச்சர் கோ.சி.மணி கூறுகையில், கூட்டுறவு சங்க தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தீர்ப்பு கிடைத்த பின்னர் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை செய்து கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்துவதற்கு தனி தேர்தல் ஆணையம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் முடிவு செய்யப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த 2007-08 ஆம் ஆண்டின் பிப்ரவரி வரை இந்த பொருட்கள் 842.87 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுக்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி வரை கூட்டுறவு அமைப்புகள் மூலம் சுமார் 8409 கோடி ரூபாய் நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நலிந்த பிரிவினருக்கு கடன் வழங்கும் திட்டம், விவசாய கடன் அட்டை திட்டம், சிறுவணிகர்கள் கடன் திட்டம் முதலிய பல்வேறு திட்டங்கள் கூட்டுறவு வங்கிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கோ.சி.மணி கூறினார்.