சேது சமுத்திர கால்வாயில் சோதனை ஓட்டமாக கப்பல் விடப்படும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
ஆவடி அண்ணா சிலை அருகே நடந்த தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில், சேது சமுத்திர திட்டத்தை 6-வது வழித்தடத்தில் செயல்படுத்த பா.ஜனதா அரசுதான் அனுமதி வழங்கியது. அதன்பின்னர் 2005-ம் ஆண்டு ஜுலை மாதம் 2-ந் தேதி இந்திய பிரதமர் மன்மோகன்சிங், சேது சமுத்திர திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது இந்த திட்டத்தை எதிர்க்காதவர்கள், 2 வருடம் கழித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். உச்ச நீதிமன்றம், ராமர் பாலம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில் மட்டும் ஆழப்படுத்த தடை விதித்து, மற்ற இடங்களில் ஆழப்படுத்த அனுமதி வழங்கியது.
இப்போது பாக் ஜலசந்தியில் கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலில் எத்தனை அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி மனுதாக்கல் செய்ய வேண்டும்.
அதற்காக சேது சமுத்திர கால்வாயில் சோதனை ஓட்ட கப்பல், இன்னும் இரு தினங்களில் விடப்பட உள்ளது. ஏறத்தாழ 32 அடி ஆழம் கடலில் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 4 அடிதான் தோண்ட வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் ஒரு திட்டம் முழுஅளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் பெயருக்காக, தன்னுடைய புகழுக்காக சேது சமுத்திர திட்டம் நடைபெற கூடாது என நினைக்கிறார்கள். 100 ஆண்டு கனவு திட்டமான சேது சமுத்திர திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பும் திட்டத்துக்கு சாதகமாக அமையும் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.