ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்றும், இத்திட்டப் பணிகள் தொடர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தொடங் கப்பட்ட தினம் சென்னையில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ஒகேனக்கல் பிரச்சனையில் மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி போனாலும், தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்தாலும், விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதியோ ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தேர்தலைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில்தான் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக கர்நாடக தலைவர்கள் தான் அறிவிக்க வேண்டும்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தம் காரணமாக கருணாநிதி இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ஏற்கத்தக்கதல்ல. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சனையை எடியூரப்பா கிளப்பியதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் கடந்த 1998ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியினர் இத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எல்லா பிரச்சனைகளுக்கும் பாரதிய ஜனதா கட்சியை குற்றம்சாட்டி சிலர் கமலாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இங்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் நியாயமாக நேற்று காரைக்குடி சென்று சோனியாவுக்கு முன்பாகத் தான் ஆர்ப்பாட்டம் நடத்தியிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் ஜி.குமாரவேலு, பொதுச் செயலாளர்கள் தமிழிசை சவுந்தரராஜன், மோகன் ராஜூலு, வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் டி.வி. கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.