மத்திய அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13,000 பேர் தங்களுக்கு பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 29ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாக மறியல் போராட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடந்த பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தாசரி நாராயண ராவிடம் பேசி தீர்வு காணப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார். அதன்படி அவர், மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து என்.எல்.சி. இயக்குனர்கள் பாபுராவ், சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ, காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்குமார், தொழிலாளர் துறை அதிகாரிகள் ஏ.ஐ,டி.யூ.சி. பொது செயலாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும், போராட்டத்தை ஒரு வாரத்துக்கு தள்ளி இருப்பதாகவும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் பணிக்கு திரும்புவதாக உறுதி அளித்தனர்.