ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழர்களின் மீதும் தமிழ் அமைப்புக்கள் மீதும் கன்னடர்கள் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஒகேனக்கல் விவகாரத்தில் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் சில கன்னட அமைப்புகள் போராட்டத்துடன் வன்முறையில் இறங்கியிருப்பது தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கன்னடர்கள் வெறியுடன் தமிழர்கள் மீதும் தமிழ் அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தத் துவங்கியிருப்பதால் தமிழர்களும் தக்க பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
மதுரை, கோவை, தஞ்சை, திருவண்ணாமலை, சென்னை நகரங்களில் கன்னடர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. கர்நாடகப் பேருந்துகள் மறிக்கப்பட்டதுடன் கர்நாடக தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
சென்னையில் போராட்டம்!
பெங்களூருவில் உள்ள தமிழ்ச் சங்கம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடகச் சங்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இன்று காலை 11 மணியளவில் அங்கு திரண்ட சுமார் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய அரசு மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து முழக்கமிட்டனர்.
கர்நாடக சங்கத்தையும் அதன் வளாகத்துக்குள் உள்ள கன்னட பள்ளியையும் மூட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களைச் சமாதானம் செய்வதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அப்போது சிலர், கர்நாடக சங்கம் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த கன்னட போர்டு அடித்து நொறுக்கியதுடன் அதிலிருந்த கன்னட எழுத்துக்களை தார் பூசி அழித்தனர். கர்நாடகச் சங்கத்தின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கப்பட்டது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வன்னியரசு, ஆர்வலன், பொன்னிவளவன், செல்வம், தமிழ்மதி, குமரப்பா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடுப்பி ஓட்டல் சூறை!
இதற்கிடையில், கர்நாடகச் சங்க முற்றுகையில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர் 11.30 மணிக்கு மேற்கு மாம்பலம், பிருந்தாவன் சாலையில் உள்ள உடுப்பி ஓட்டலுக்குள் புகுந்து கன்னட அமைப்புகளை எதிர்த்து முழக்கமிட்டபடி ஓட்டலை சூறையாடினார்கள்.
எம்.ஜி.ஆர்.நகர் அண்ணா சாலையில் உள்ள உடுப்பி ஓட்டலை முற்றுகையிடப் போவதாக 131வது வார்டு பா.ம.க. கவுன்சிலர் வெங்கடேசன் அறிவித்தார். அதன்படி இன்று அவரும் அவரது ஆதரவாளர்களும் உடுப்பி ஓட்டலை நோக்கி ஊர்வலமாக நடந்து வந்தனர்.
அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திய காவலர்கள் அனைவரையும் கைது செய்தனர்.