கன்னடர்களுக்கு எதிராக சென்னையில் நாளை திரையுலகம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்.
ஒகேனக்கல் பிரச்சினையையொட்டி, கர்நாடக மாநிலத்தில் கன்னட வெறியர்கள் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தமிழ் சினிமா ஓடும் தியேட்டர்கள் தாக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் பஸ்களையும் தாக்குகிறார்கள். கர்நாடக டி.வி.க்களில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பையும் தடுத்து நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளார்கள்.
கன்னட வெறியர்களின் இதுபோன்ற தாக்குதல்களை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை தமிழ் திரையுலகம் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 'குசேலன்' படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். பின்னர் மும்பை சென்று இருந்தார். மும்பையில் இருந்து நேற்று அவர் அவசரமாக சென்னை திரும்பினார்.
அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது பற்றி சரத்குமாருடன் கலந்து பேசியபின், சொல்கிறேன்'' என்றார்.
நடிகர் கமலஹாசன் கூறும்போது, 'நான் வெளிநாடு செல்கிறேன், ஆனாலும் 4ஆம் தேதி மதியம் சென்னை திரும்பி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வேன்' என்றார்.
இதேபோல் நடிகர்கள் அர்ஜூன், பிரகாஷ்ராஜ், பிரபுதேவா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.