''கர்நாடக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சென்னையில் 5ஆம் தேதி பேரணி நடைபெறும்'' என்று பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னட வெறியர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. கர்நாடக தமிழர்களின் கலை-பண்பாடு மையமாக திகழும் பெங்களூர் தமிழ் சங்கம் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு சொந்தமான ஒகேனக்கல் மீது அத்துமீறி உரிமை கொண்டாட தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார்கள். கர்நாடகத்தில் உள்ள சகல கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளனர். காவிரி பிரச்சினை, வள்ளுவர் சிலை திறப்பு பிரச்சினை போன்றவற்றில் அடாவடித்தனமாக கன்னட வெறியர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய காவல் படையை அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்த வேண்டிய கடமை தமிழக முதலமைச்சருக்கு உண்டு. அதை அவர் செய்வார் என நம்புகிறேன்.
பெங்களூர் தமிழ்சங்கமும், தமிழர்களும் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பில் ஏப்ரல் 5ஆம் தேதி மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தப்படும்.
கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், அனைத்து தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.