''வீட்டு வசதி வாரியம் பற்றி மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ள புகாருக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை'' என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
இது குறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கான நிலமெடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் 100 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய நில எடுப்புச் சட்டப்படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலமெடுப்பு சட்டத்தின் படி உரிய இழப்பீட்டுத் தொகையும், நீதிமன்ற உத்தரவபுடி கூடுதல் இழப்பீட்டு தொகையும் சம்பந்தப்பட்ட நில உரி மையாளர்களுக்கு வாரியத்தின் சார்பாக வழங்கப்பட்ட பின்னரே நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பல ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கும், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் குறைந்த விலையில் வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனடைந்து வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக நில எடுப்புச் சட்டப்படி வாரியத்திற்காக எந்த நிலமும் வாங்கப்பட வில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் நில எடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்ட நிலங்களில் தான் தற்போது வாரியத்தின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சட்ட பூர்வமான நிலமெடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான திசை திருப்பும் பிரச்சாரங்களால், நலிந்த பிரிவினருக்கு உரிய திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திட இயலவில்லை. வாரியத்தின் கட்டுமானப் பணிகளும், வளர்ச்சியும் முடக்கப்படுகின்றன.
எனவே டாக்டர் ராமதாஸ் வீட்டு வசதி வாரியம் பற்றித் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. அவர் வீட்டு வசதி வாரியம் பற்றி தெளிவான குறிப்பிட்ட குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால் அவற்றை ஆராய்ந்து, உண்மை இருக்கு மேயானால் களையும் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.