''கர்நாடகாவில் தயவு தாட்சணியமின்றி வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும்'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை காரணம் காட்டி பேருந்துகளை உடைப்பது, தமிழர்களை தாக்குவது, தமிழ் சினிமா திரையிடப்படும் திரை அரங்குகளை தாக்குவது போன்ற செயல்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களால் செய்யப்படும் காரிய அல்ல.
பிரச்சினைகளை தீர்க்க இந்த செயல்கள் உறு துணையாக நிற்காது. அங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். கர்நாடகத்தில் நடைபெறுவது கவர்னர் ஆட்சியாக இருந்தாலும் ஒரு வகையில் மத்திய ஆட்சிதான். தயவு தாட்சணியமின்றி வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கர்நாடகம் காவிரி தண்ணீரை தங்களுக்கு பயன்படுத்தியது போக மீதி தண்ணீரைத்தான் தமிழ்நாடு குடிநீருக்கு பயன்படுத்துகிறது. எங்கிருந்து குடிநீர் எடுக்க இருக்கிறோமோ அந்த பகுதி தமிழகத்தின் எல்லை என்பது விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
தமிழகத்துக்கு தண்ணீர் எடுப்பதால் கர்நாடகத்துக்கு என்ன பாதிப்பு. அவர்களுக்கு கிடைக்கும் தண்ணீரை தடுக்கிறதா? என்பதை விளக்க வேண்டும். அவர்கள் நடத்துவது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற போராட்டம். கண்டனத்துக்குரியது. அங்கு நடைபெறும் போராட்டத்துக்கு பா.ஜனதா பொறுப்பல்ல. கன்னட வெறியர்களே காரணம் என்று இல.கணேசன் கூறினார்.