திருப்பூர் சாயக் கழிவினை பைப் லைன் மூலம் சுத்தப்படுத்தி ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தமிழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் 2வது நாளாக நேற்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஏப்ரல் 5ஆம் தேதி காரைக்குடிக்கு வரும் சோனியாகாந்திக்கு சட்டமன்ற காங்கிரஸ் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது என்றும் அன்றைய தினம் நடைபெறும் காங்கிரஸ் பேரணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் பெருமளவு தொண்டர்களை திரட்டி வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மூடிக் கிடக்கும் படாளம் சர்க்கரை ஆலையை திறக்க தமிழக அரசு எடுக்கின்ற முயற்சிகளை இக்கூட்டம் வரவேற்றது. அதே நேரத்தில் அந்த ஆலையை தொடர்ந்து கூட்டுறவு சர்க்கரை ஆலையாகவே நடத்த வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் தனியாரிடம் அந்த சர்க்கரை ஆலையை கொடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசை வலியுறுத்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் காயத்திரி தேவி கொண்டு வந்த தீர்மானத்தை இக்கூட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது.
திருப்பூர் சாயக் கழிவினை பைப் லைன் மூலம் சுத்தப்படுத்தி ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. அதனை உடனடியாக நிறைவேற்றி தர தமிழக அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று விடியல் சேகர், ஆர்.எம்.பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தை இக்கூட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.