மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியாயினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து பூண்டு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. மதுராந்தகம் அருகே உள்ள கிள்ளியூர் மேம்பாலத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு லாரி வந்தபோது பழுதாகி நின்றது. பின்னர் லாரி ஓட்டுனர் - கிளீனர் இருவரும் வண்டியின் பின்புறத்தில் நின்று லாரியில் ஏற்பட்டிருந்த பழுதை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வேன் ஒன்று சென்னை பெரம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேகமாக வந்த வேன், பழுதாகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி அருகே நின்ற ஓட்டுனர் - கிளீனர் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
வேனில் இருந்த 8 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்தார். இறந்தவர்களின் பெயர் விவரம் தெரிய வில்லை.
படுகாயம் அடைந்த 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், 3 பேர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.